* மொஹல்லா கிளினிக் மூடல் சுகாதார கட்டமைப்பை முடக்கும் செயல் பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
* மொஹல்லா கிளினிக் மூடல் சுகாதார கட்டமைப்பை முடக்கும் செயல் பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : மார் 07, 2025 10:25 PM

புதுடில்லி:“டில்லி மாநகரில் 250 மொஹல்லா கிளினிக்குகளை மூடும் பா.ஜ., அரசின் முடிவு, சுகாதார உட்கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கை,”என, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெய்யின் கூறினார்.
நிருபர்களிடம் நேற்று, சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:
டில்லி மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், ஆம் ஆத்மி அரசில் மாநகர் முழுதும் மொஹல்லா கிளினிக்குகள் துவக்கப்பட்டன. இங்கு, மருத்துவ ஆலோசனை மற்றும் 365 வகையான நோயறிதல் சோதனைகள் உட்பட அடிப்படை மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதனால், அடிப்படை மருத்துவச் சிகிச்சைக்காக மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை. அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதிருந்தால், மொஹல்லாவில் உள்ள டாக்டர்களே அதற்கு பரிந்துரை வழங்கி வருகின்றன. ஆனால், டில்லியில் அமைக்கப்பட்டுள்ள 550 மொஹல்லா கிளினிக்குகளில் 250 கிளினிக்குகளை மூட, பா.ஜ., அரசு முடிவு எடுத்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மொஹல்லா கிளினிக்குகளை விரிவுபடுத்த திட்டமிட வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றை மூடக்கூடாது. இதனால் டில்லி மக்கள் கடும் அவதிப்படுவர். ஒரு கிளினிக்கைக் கூட மூட வேண்டாம் என ஆம் ஆத்மி சார்பில் பா.ஜ., அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
பா.ஜ., அரசின் இந்த முடிவு டில்லி மாநகரின் சுகாதார உட்கட்டமைப்பை முடக்கும் செயல். இந்த கிளினிக்குகளில் தினமும் சராசரியாக 7,500 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் நேற்று முன் தினம், “டில்லி மாநகரில் 250 மொஹல்லா கிளினிக்குகள் உடனடியாக மூடப்படும். இந்த கிளினிக்குகள் ஆவணங்களில் மட்டுமே உள்ளன. அந்தக் கிளினிக்குகளுக்கு மாதந்தோறும் வாடகையும் வழங்கப்படுகிறது. வாடகை பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது,”என்றார்.
ஆம் ஆத்மி அரசு கடந்த 2015ல் டில்லி முழுதும் மொஹல்லா கிளினிக்குகளைத் துவக்கியது.