ஆம் ஆத்மியின் ரூ.45 கோடி லஞ்சம்: உறுதி செய்தது சி.பி.ஐ.,
ஆம் ஆத்மியின் ரூ.45 கோடி லஞ்சம்: உறுதி செய்தது சி.பி.ஐ.,
ADDED : ஏப் 01, 2024 08:10 AM

புதுடில்லி; மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி பெற்ற லஞ்சப் பணத்தில் 45 கோடி ரூபாய், கோவா சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறையின் விசாரணையும் உறுதி செய்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.மதுபான அதிபர்களுக்கு சாதகமாக கொள்கை வகுப்பதற்காக, தென் மாநிலங்களைச் சேர்ந்த மதுபான ஆலை அதிபர்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பணத்தில் 45 கோடி ரூபாய், 2022ல் நடந்த கோவா சட்டசபை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த பணம், ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை நடத்திய தனி விசாரணையிலும், இந்த 45 கோடி ரூபாய் கோவா தேர்தலுக்கு செலவிடப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களையும் வரித்துறை மற்றும் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

