புதிய மதுபான கொள்கையை தடுப்பு ரூ. 8,900 கோடி வருவாய் இழப்பு
புதிய மதுபான கொள்கையை தடுப்பு ரூ. 8,900 கோடி வருவாய் இழப்பு
ADDED : பிப் 25, 2025 08:15 PM
விக்ரம் நகர்:செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி கூறியதாவது:
சி.ஏ.ஜ., அறிக்கையில் உள்ள எட்டு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்கள் பழைய கலால் கொள்கையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. ஒன்று மட்டுமே புதிய கொள்கையை பற்றி கூறுகிறது.
முந்தைய ஆம் ஆத்மி அரசு, எப்போதும் பழைய கலால் கொள்கையால் ஊழல் நடப்பது குறித்து குறை கூறி வந்தது. அது சட்டவிரோத மதுபானக் கடத்தலை எளிதாக்கியது. மதுபானக் கடை உரிமையாளர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், விலைகளை உயர்த்தியதாகவும், டில்லியின் கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை காட்டுகிறது.
ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய கலால் கொள்கை மிகவும் வெளிப்படையானது. டில்லியின் வருவாய் வசூலை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என்றும் சி.ஏ.ஜ., அறிக்கை காட்டுகிறது.
அதே கொள்கையை செயல்படுத்திய பிறகு பஞ்சாபில் கலால் வருவாய் 65 சதவீதம் அதிகரித்தது.
இருப்பினும், துணைநிலை கவர்னர், சி.பி.ஐ., அமலாக்கத் துறையின் தலையீடு காரணமாக இந்தக் கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் டில்லிக்கு ஆண்டுக்கு 8,900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கொள்கையைத் தடுப்பதில் இவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -