ADDED : ஆக 23, 2024 11:10 PM
கொரோனா காலம் தவிர, மற்ற காலங்களில் 24 மணி நேரம் இயங்கி வந்த பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 20 வரை எந்த ரயில்களும் நிற்காது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரின் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக உள்ள கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் தினமும் பல்லாயிரம் பயணியர் வந்து செல்கின்றனர்.
இதை மையமாக கொண்டு தான், சிவாஜிநகர், திம்மையா சாலை, வசந்தநகர், ஆர்.டி.நகர், கங்கா நகர், காவல் பைரசந்திரா, பிரேசர் டவுன், காக்ஸ் டவுன், பில்லண்ணா கார்டன், பெரியார் நகர், கே.ஜி.ஹள்ளி, ஹெக்டே நகர்.
கொத்தனுார், பைரதி, முனிரெட்டி பாளையா, சஞ்சய் நகர், பென்சன் டவுன், சின்னப்பா கார்டன், ஜெயமஹால், டாலர்ஸ் காலனி, அசோக் நகர், விவேக் நகர், ஈஜிபுரா, ஆஸ்டின் டவுன் போன்ற பல இடங்களை சேர்ந்தோர் பயணம் செய்வது வழக்கம்.
தமிழகத்தை சேர்ந்தோர் பெரும்பாலும் இப்பகுதிகளில் வசிப்பதால், இந்த ரயில் நிலையம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து உள்ளது என்று கூறினால், அது மிகையாகாது. இங்கு பாசஞ்சர் ரயில்கள் மட்டுமின்றி அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களும் நின்று செல்கின்றன. இதனால் எப்போதுமே இந்த ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.
இத்துடன் தங்கவயல், பங்கார்பேட்டை, மாலுாரை சேர்ந்த தினப்பயணியர் விதான் சவுதா, விகாஸ் சவுதா, எம்.எஸ்., பில்டிங், உயர் நீதிமன்றம், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., எம்.எஸ்.ஐ.எல்., உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரும், பெங்களூரு பல்கலைக்கழகம், எஸ்.ஜே.ஆர்.சி., பாலிடெக்னிக், சட்டக்கல்லூரி, மவுன்ட் கார்மல், செயின்ட் ஜோசப், கிரைஸ்ட் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களும் தின பயணியராக இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றனர்.
பவுரிங், ஜெயின், விக்ரம், நியுரோ சென்டர், மணிப்பால், கித்வாய், சஞ்சய்காந்தி, அப்பல்லோ என பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் இங்கு வந்திறங்கி செல்கின்றனர்.
பெங்களூரு உயர் மறை மாவட்ட பேராயம், சிவாஜிநகர் பசிலிகா எனும் ஆரோக்கியமாதா தேவாலயம், விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம், கன்டோன்மென்ட் பெரியமசூதி செல்வோருக்கும் வசதியான ரயில் நிலையமாக அமைந்து உள்ளது.
இந்த ரயில் நிலைய விரிவாக்கம், புதுப்பிக்கும் பணிகள் 2022ல் துவங்கின. தற்போது முழு மூச்சாக பணிகள் நடப்பதால் இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தவும், புறப்படவும் மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட உள்ளது.
கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக சென்று வந்த ரயில்கள், இங்கு நிறுத்தப்படாது. இதையடுத்து பாசஞ்சர் ரயில்கள் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்திலும், அனைத்து ரயில்களும் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த உத்தரவு செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 20 வரை 92 நாட்கள் அமலில் இருக்கும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
- நமது நிருபர் --