ADDED : மார் 05, 2025 08:12 PM

புதுடில்லி,:ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை காணாமல் போன 28 சிறுமியர் உட்பட 39 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் ரோஹினி துணைக் கமிஷனர் அமித் கோயல் கூறியதாவது:
அமன் விஹார், பிரேம் நகர், கஞ்ச்வாலா, பேகம்பூர், கே.என்.கே. மார்க், பிரசாந்த் விஹார், புத்த விஹார், வடக்கு ரோஹினி மற்றும் விஜய் விஹார் ஆகிய பகுதிகளில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சந்தேக நபர்களின் போடோக்கள் ஆட்டோ மற்றும் மின் ரிக்ஷா ஸ்டாண்டுகள், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டரிடம் காட்டி விசாரணை நடத்தப்பட்டது.
அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமன் விஹாரில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமியர் உட்பட 5 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பிரேம் நகரில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 4 சிறுமியர் உட்பட 6 பேர், கஞ்ச்வாலாவில் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுமியர் உட்பட 7 பேர், பேகம்பூரில் 11 முதல் 17 வயதுக்குள் 2 சிறுமியர் உட்பட 4 பேர் மீட்கப்பட்டனர்.
அதேபோல, கே.என்.கே. மார்க்கில் 15 மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி உட்பட 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பிரசாந்த் விஹாரில் 14 முதல் 15 வயதுக்குட்பட்ட 2 சிறுமியர், புத்த விஹாரில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 5 சிறுமியர் உட்பட 7 பேர்; வடக்கு ரோஹினியில் 15 வயது சிறுமி, விஜய் விஹாரில் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட 4 சிறுமியர் உட்பட 5 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிப்.,28ம் தேதி வரை மாயமானவர்கள்.
மீட்கப்பட்ட அனைவரும் விசாரணைக்குப் பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடத்தல்காரர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.