அதிருப்தி! குற்ற வழக்கில் சிக்கினாலே வீட்டை இடிப்பதா?: புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
அதிருப்தி! குற்ற வழக்கில் சிக்கினாலே வீட்டை இடிப்பதா?: புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : செப் 02, 2024 11:25 PM
புதுடில்லி: 'குற்ற வழக்குகளில் ஒருவர் சிக்கினாலே அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்ப து சரியா. சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை இருக்க வேண்டும். இது தொடர்பாக, நாடு முழுதுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகள் புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி, ஜமாயத் -- உலாமா - இ - ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளது.
டில்லி ஷாஜகான்பூரில் நடந்த வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இதுபோன்று, புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி, அந்த அமைப்பு கோரியிருந்தது. இதைத் தவிர, பல தனிநபர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நோட்டீஸ்
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சட்டங்களுக்கு உட்பட்டே, வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
'குற்ற வழக்கில் ஒருவர் சிக்கினாலே வீடுகளை இடிப்பது முறையல்ல' என அமர்வு குறிப்பிட்டது.
உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மாநகராட்சி விதிகள் மற்றும் பிற சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அதன் பிறகே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுகின்றன.
ஆனால், குற்ற வழக்கில் சிக்கியதால் வீடு இடிக்கப்பட்டதாக பொய்யான, தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். எந்த நிலையிலும் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, குற்றம் சாட்டப்பட்டதாலேயே வீடுகள் இடிக்கப்படவில்லை.
சட்ட விதிகளை மீறியதால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கும், அந்த வீட்டின் உரிமையாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
வழிமுறைகள்
இதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இவற்றை கேட்ட அமர்வு கூறியதாவது:
சட்டவிரோதமாக மற்றும் பொது சாலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ள எந்த ஒரு கட்டடத்தையும் காப்பாற்ற மாட்டோம். அது வழிபாட்டு தலமாக இருந்தாலும் சரி.
சாலை மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக, சட்டவிரோதமாக மற்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதுவும் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், குற்ற வழக்கில் சிக்கியதாலே ஒருவருடைய வீட்டை, புல்டோசர் வாயிலாக இடிக்கப்படுவதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், பொதுவான வழிமுறைகள் உருவாக்கப்படும். அது நாடு முழுதும் பொருந்தக் கூடியதாக இருக்கும்.
இந்த விஷயத்தில் மனுதாரர்கள் மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய ஆலோசனைகள், பரிந்துரைகளை தெரிவிக்கலாம். அந்த அறிக்கைகளை, மத்திய பிரதேச அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பெற்று, தொகுக்க வேண்டும்.
சட்டத்தில் உள்ள வாய்ப்புகளை, தனிநபர்களோ, அரசு அமைப்புகளோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அதற்காகவே, ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியது.
வழக்கின் அடுத்த விசாரணை, 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்கில் சிக்கியதால் வீடு இடிக்கப்பட்டதாக பொய்யான, தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். எந்த நிலையிலும் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, குற்றம் சாட்டப்பட்டதாலேயே வீடுகள் இடிக்கப்படவில்லை. சட்ட விதிகளை மீறியதால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும், அந்த வீட்டின் உரிமையாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.