அபராஜிதா ‛மசோதாவை 'கிடப்பில் போட திட்டம் ?: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர்
அபராஜிதா ‛மசோதாவை 'கிடப்பில் போட திட்டம் ?: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர்
ADDED : செப் 06, 2024 11:23 PM

கோல்கட்டா: மேற்கவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ‛‛அபராஜிதா'' மசோதாவை , ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கவர்னர் ஆனந்த போஸ், அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி. கார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாணவர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மேற்கு வங்க கிரிமினல் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் மசோதாவை, முதல்வர் மம்தா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இச்சட்டத்தின்படி பாலியல் குற்ற வழக்குகளில் மரணம் ஏற்பட்டால், விரைவு நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இம்மசோதாவை கிடப்பில் போட ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கவர்னர் தரப்பில் கூறப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரே நடைமுறைப்படுத்த முடியும்.