ADDED : செப் 01, 2024 11:45 PM

மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பதே, சுற்றுலா பயணியருக்கு குஷியான அனுபவம். இதற்காகவே மழைக்காலம் எப்போது வரும் என, ஆர்வத்துடன் காத்திருப்பர். இவர்களுக்கு தகுதியான இடம் அம்போலி நீர் வீழ்ச்சி.
சுற்றிலும் பச்சை பசேல் என, பசுமை போர்வை போர்த்தியதை போன்ற மலையில் இருந்து பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியை காண யாருக்கு தான் ஆசை இருக்காது.
அதிலும் மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பதே, அலாதியான இன்பமாக இருக்கும். இந்த இன்பத்தை அனுபவிக்கவே, மழைக்காலத்துக்காக காத்திருப்பர்.
கர்நாடகாவில் நீர் வீழ்ச்சிகள் ஏராளம். மழைக்காலத்தில் தட்சிண கன்னடா, சிக்கமகளூரு உட்பட பல மாவட்டங்களில் தற்காலிக நீர் வீழ்ச்சி உருவாகும். வாகனங்களில் செல்வோர் வழியில் நீர் வீழ்ச்சி தென்பட்டால், வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, சிறிது நேரம் நீர் வீழ்ச்சியை ரசித்து விட்டு செல்கின்றனர்.
மழைக்காலத்தில் ரசிப்பதற்கென்றே, சில சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் அம்போலியும் ஒன்றாகும்.
பெலகாவியின், கர்நாடகா - கோவா எல்லைப் பகுதியில், அம்போலி நீர் வீழ்ச்சி உள்ளது. இது சுற்றுலா பயணியரை பொறுத்த வரை சொர்க்கமாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, ஹோ என்ற பேரிரைச்சலுடன் பாய்ந்து வரும் அம்போலி நீர் வீழ்ச்சியின் அழகை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இதன் அழகை ரசிக்க, வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா உட்பட வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
மூன்று மாதங்களாக பரவலாக மழை பெய்வதால், அம்போலி அணையில் நீர் வரத்து அதிகரித்து, கண் கொள்ளா காட்சியாக உள்ளது. பெலகாவி வரும் சுற்றுலா பயணியர், அம்போலி நீர் வீழ்ச்சியை காண மறக்காதீர்கள்.
எப்படி செல்வது?
வெளி மாநிலங்களின் சுற்றுலா பயணியர், கோவா, சாவந்தவாடி வழியாக பஸ்சிலோ, ரயிலிலோ அம்போலிக்கு வரலாம். சாவந்தவாடி அருகில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு இறங்கி வாடகை வாகனங்களில், நீர் வீழ்ச்சிக்கு செல்லலாம்
- நமது நிருபர் -.