UPDATED : ஆக 25, 2024 05:40 AM
ADDED : ஆக 25, 2024 02:34 AM

திருவனந்தபுரம், : கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதைத் தவிர, 1,935 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2022ல் இந்த காய்ச்சலுக்கு 93 பேரும், 2023ல் 103 பேரும் கேரளாவில் பலியாகி உள்ளனர்.
ஆனால், இந்தாண்டு இன்னும் எட்டு மாதங்களே முடிவடையாத நிலையில், 121 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எலிக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அறிகுறிகள்
இந்த தொற்று, எலி மற்றும் நாய் போன்றவற்றின் சிறுநீர், எச்சங்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவக் கூடியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை வலி, வாந்தி, அடிவயிறு வலி ஆகிய அறிகுறிகள் தென்படும்.
சிலருக்கு அறிகுறிகள் தென்படாது. இந்த பாதிப்பு, குறைந்தபட்சம் இரண்டு நாட்களில் இருந்து, அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகள் வாயிலாக இதை குணப்படுத்த முடியும். உரிய நேரத்தில் கவனிக்க தவறினால், சிறுநீரகத்தை பாதித்து, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கேரளாவில் பாதிப்பு ஏன்?
சமீபகாலமாக கேரளாவில் பல்வேறு வகை காய்ச்சல்கள் அதிகரித்து வருகின்றன.
பன்றி காய்ச்சல், மேற்கு நைல் மூளை காய்ச்சல், குரங்கு காய்ச்சல், ஜப்பான் மூளை காய்ச்சல், டெங்கு, நிபா, எபோலா, ஆந்த்ராக்ஸ் என, தொடர்ந்து அச்சுறுத்தும் விதவிதமான காய்ச்சல்களால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளா, வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளை அதிகமாக கொண்டுள்ளதால், இங்கு கால்நடை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆடு, மாடு, குரங்கு, வவ்வால் என பல்வேறு விதமான விலங்குகளின் எச்சம் மற்றும் கழிவுகள் வாயிலாக, நாள்தோறும் ஏராளமான வைரஸ்கள் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பருவமழையின் தாக்கம் அதிகம் இருப்பதால், வைரஸ் பரவல் அதிகரித்து, பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இயற்கையான இருப்பிடங்களை தொலைத்த வவ்வால், காட்டுப் பூனை உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படையெடுப்பதால், இது போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில் வசிக்கும் பலர் உயர் கல்விக்காகவும், தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மருத்துவம், செவிலியர் தொடர்பான பணிகளை செய்யும் அவர்களை பாதிக்கும் வைரஸ்கள், கேரளாவிலும் எளிதில் நுழைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் பரவிய
தொற்று
1கேரளாவில் நிபா வைரஸ் பரவல், 2018ல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 17 பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில், நான்கு முறை இந்த காய்ச்சல் பரவியுள்ளது.
2முதல் குரங்கு காய்ச்சல் பாதிப்பு, 2022 ஜூலையில் கொல்லம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
3 கடந்த 2022ல் திருச்சூரில் ஆந்த்ராக்ஸ் பரவல் கண்டுபிடிப்பு.
4 கடந்த 2022ல் எலிக் காய்ச்சல் மற்றும் பூச்சிக்கடியால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் கண்டுபிடிப்பு.
௫ கடந்த 2023ல் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.
6 கொரோனா பரவல் சமயத்தில் அதிகளவு உயிரிழப்புகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலேயே ஏற்பட்டன.