போராட்ட டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் பணிக்கு திரும்புங்க!
போராட்ட டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் பணிக்கு திரும்புங்க!
ADDED : ஆக 23, 2024 02:09 AM

புதுடில்லி நீதி மற்றும் மருத்துவம் எதற்காகவும் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், கோல்கட்டா பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில போலீசின் செயல்பாடுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பயிற்சி பெண் டாக்டர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
பயிற்சி டாக்டரின் சடலம் கடந்த 9ம் தேதி காலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இதை தற்கொலை என்று கூறினர். பின்னர் சந்தேகத்துக்குரிய மரணம் என்று கூறினர். போராட்டங்கள் தீவிரமானதைத் தொடர்ந்தே, கொலை வழக்காக பதிவு செய்தனர்.
கடந்த 9ம் தேதி காலையிலேயே கண்டெடுக்கப்பட்ட உடல், மாலையிலேயே பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனே தகனமும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நள்ளிரவு 11:45 மணிக்கு தான், போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிலும் சந்தேக மரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு எடுத்தது. சம்பவம் நடந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகே சி.பி.ஐ., வசம் இந்த வழக்கு வந்தது. ஆனால், அதற்குள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை அழித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பல உண்மைகளை மறைக்க முயற்சி நடந்துள்ளதாக, மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில், மாநில போலீசின் செயல்பாடுகள் அந்த சந்தேகத்தை உறுதிபடுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
பயிற்சி டாக்டரின் உடல் கண்டெடுக்கப்பட்டு, 14 மணி நேரம் கழித்தே எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. போலீசின் கேஸ் டைரியை பார்க்கும்போது, காலையிலேயே அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில், கல்லுாரி முதல்வர் மீது பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவருடன் யார் யார் தொடர்பில் இருந்தனர். யாருடைய உத்தரவுக்காக காத்திருந்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் தாமதம் செய்யப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் குறிப்பிடும் நேரங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
போலீசார் தெரிவித்துள்ள தகவல்கள் குழப்பமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளன. இதுபோன்ற ஒரு விசாரணையை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதி மற்றும் மருத்துவம் யாருக்காகவும் காத்திருக்க கூடாது. அதை தடுக்கவும் கூடாது. பொதுமக்கள், நோயாளிகளின் நலனைக் கருதி, டாக்டர்கள் தங்களுடைய போராட்டங்களை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது.
அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்கள் தொடரலாம். அதை தடுக்கவோ, கலைக்கவோ மேற்கு வங்க அரசு முயற்சிக்கக் கூடாது. அதே நேரத்தில், வன்முறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், போலீசார் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்.
டாக்டர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்க, தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டோர் தங்களுடைய கோரிக்கைகள், ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம். இந்தப் பணிக்குழுவுக்கு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வசதி செய்ய வேண்டும்.
அதுவரை டாக்டர்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். மாநில சுகாதார செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுடன், மத்திய சுகாதாரத் துறைச் செயலர், ஒரு வாரத்துக்குள் ஆலோசனை செய்து, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய வேண்டும். அதற்கடுத்த ஒரு வாரத்துக்குள் அவற்றை மாநில அரசுகள் நடைமுறைபடுத்த வேண்டும்.
பணிக்கு திரும்பும் டாக்டர்கள் மீது, எந்த மாநில அரசும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இதில் சிரமங்களை சந்தித்தால், எங்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.