பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விங்க் கமாண்டரை கைது செய்ய தடை
பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விங்க் கமாண்டரை கைது செய்ய தடை
ADDED : செப் 13, 2024 10:02 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் விங்க் கமாண்டர் மீது பாலியல் புகார் கூறிய வழக்கில் விங்க் கமாண்டரை கைது செய்ய தடைவிதித்து கோர்ட் முன்ஜாமின் வழங்கியது.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் விமானப்படை முகாமில் பணியாற்றி வரும் 26 வயது பெண் விமானப்படை அதிகாரி கடந்த 10-ம் தேதி பட்ஹாம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தனது உயர் அதிகாரியான விங்க் கமாண்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
2023-ம் ஆண்டு டிச. 31-ம் தேதி புத்தாண்டு பரிசுடன் வந்து புத்தாண்டு விருந்தில் பங்கேற்க வருமாறு கட்டாயப்படுத்தினார். மறுத்தேன் உடன் அன்று இரவே அவரது அறைக்கு அழைத்து என்னிடம் அத்துமீறி இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியேறினேன். விங்க் கமாண்டரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
பட்ஹாம் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் விங்க் கமாண்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 50 ஆயிரம் பினைத்தொகை அளித்ததன் பேரில், முன் ஜாமின் வழங்கியதுடன், கோர்ட் உத்தரவின்றி விங்க் கமாண்டரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டு விசாரணையை 14 மற்றும் 15-ம் தேதிகளில் ஒத்தி வைத்தார்.

