அயோத்தியில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான குழு அறிக்கை
அயோத்தியில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான குழு அறிக்கை
ADDED : ஏப் 14, 2024 10:22 PM

திருப்பதி:உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை அறிக்கையை, திருமலை திருப்பதி தேவஸ்தான குழு வழங்கியது-.
உத்தர பிரதேசம் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவிலின் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த ஜன., 22ல் நடந்தது.
உலகம் முழுதும் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் அங்கு வருகை தந்து, குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் சூழலில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
அறக்கட்டளையின் வேண்டுகோளை ஏற்று, திருப்பதி தேவஸ்தான குழு அதிகாரிகள் சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, தொழில்நுட்ப ஆலோசகர் ராமசந்திர ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை அறிக்கை ராமர் கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
இதில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகித்தல், வரிசை முறையை ஒழுங்குபடுத்துதல், உள்ளே செல்லுதல் மற்றும் வெளியேறும் வழிகள் குறித்த ஆலோசனைகள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

