ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
ADDED : செப் 13, 2024 02:34 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைதை எதிர்த்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. விசாரித்து வருகிறது. இதில் நடந்த பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அவரது வீட்டில் வைத்தே கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதியன்று சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான பெஞ்ச் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.

