0001 வாகன பேன்சி பதிவு எண் ரூ.12.75 லட்சத்துக்கு விற்பனை
0001 வாகன பேன்சி பதிவு எண் ரூ.12.75 லட்சத்துக்கு விற்பனை
ADDED : ஆக 24, 2024 01:47 AM
பெங்களூரு, : பெங்களூரில் பேன்சி நம்பர் ஒன்று, 12.75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.
பெரும்பாலான மக்களுக்கு நியூமராலஜியில் அதிக ஆர்வம் உள்ளது. அதன்படியே தங்களின் அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். புதிதாக வாகனம் வாங்கும்போது, தங்களுக்கு அதிர்ஷ்டமான எண்களை பதிவு எண்களாக பெறுகின்றனர்.
இதற்கு பெருமளவில் பணம் செலவிடவும் தயங்குவது இல்லை.
பேன்சி எண்களை தேர்வு செய்து கொள்கின்றனர். பெங்களூரில் பேன்சி எண் ஒன்று, 12.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பெங்களூரு சாந்திநகரில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில், நேற்று முன்தினம் மதியம், வாகன பதிவு எண்கள் ஏலம் விடப்பட்டன. 12:00 மணிக்கு துவங்கிய ஏலம், மாலை வரை நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மொத்தம், 62 எண்கள் ஏலத்தில் இடம் பெற்றிருந்தன. 0001, 1234, 99, 999, 0009, 0333, 4444, 6666, 1111, 777, 8888, 8055, 4444, 2727, 3333, 5999, 6999, 0099, 0555, 9999, 9000, 9099, 4599 உள்ளிட்ட பேன்சி எண்களும் இருந்தன.
இவற்றில் KA-01-ND/0001 எண், 12.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. KA-01-ND / 0009 ஐந்து லட்சம் ரூபாய்க்கும்; KA-01-ND / 9999 எண் 4.75 லட்சம் ரூபாய்க்கும்; KA-01-ND- 0999 எண் மூன்று லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.
ஏலத்தில் வைத்திருந்த 62 பதிவு எண்களில் 10 பதிவு எண்கள் விற்பனையாகின. இதனால் போக்குவரத்து துறைக்கு, 77 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்தது.
மிச்சமுள்ள 52 பதிவு எண்களில், விருப்பமானதை கோரமங்களா ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள, வாகன உரிமையாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.