0001 வி.ஐ.பி., பதிவு எண் பெற 6 லட்சம் ரூபாய் கட்டணம்
0001 வி.ஐ.பி., பதிவு எண் பெற 6 லட்சம் ரூபாய் கட்டணம்
ADDED : செப் 02, 2024 11:49 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட சில முக்கிய நகரங்களில், கார்களுக்கான 0001 உள்ளிட்ட வி.ஐ.பி., பதிவு எண் பெறுவதற்கான கட்டணத்தை 6 லட்சம் ரூபாயாக மாநில அரசு உயர்த்தியுள்ளது.
பெரும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், விலை உயர்ந்த கார்களை வாங்கும் போது, அதற்கான பதிவு எண்களை தங்களுக்கு விருப்பமான வரிசையில் வாங்குவர். இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில், 0001, 0009 போன்ற பதிவு எண்கள், வி.ஐ.பி., எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த பேன்சி பதிவு எண்களுக்கான கட்டணங்களை மஹாராஷ்டிரா அரசு உயர்த்தி உள்ளது.
இது குறித்து, மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
மும்பை, மும்பை புறநகர், புனே, தானே, ராய்காட், அவுரங்காபாத், நாசிக், கோலபுர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கான 0001 உள்ளிட்ட பதிவு எண்களுக்கு 4 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வரிசையில் 0001 என்ற எண் இல்லை எனில், வேறு வரிசையில் இருந்து அந்த எண்ணை வழங்குவதற்கான கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 12 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுவே, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 18 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வி.ஐ.பி., பதிவு எண்களை, மனைவி, மகன், மகள் உள்ளிட்ட ரத்த சொந்தங்களுக்கு மாற்றிக் கொள்ளும் நடைமுறைக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசின் வருவாயை உயர்த்தவே வி.ஐ.பி., பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.