ADDED : ஜூன் 30, 2024 10:29 PM
பெங்களூரு : கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் உற்பத்தி ஒரு கோடி லிட்டரை எட்டியது. கே.எம்.எப்., வரலாற்றில் இது பெரும் சாதனையாகும்.
இது குறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி, நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது ஒரு கோடி லிட்டரை எட்டியது. ஜூன் 28ல் ஒரு கோடி லிட்டருக்கும் அதிகமான பால் உற்பத்தியானது. கே.எம்.எப்., வரலாற்றில் இது பெரிய அரிய சாதனையாகும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்குவது, நல்ல மழை பெய்ததால், பசுக்களுக்கு பசுமை தீவனம் தாரளமாக கிடைப்பது உட்பட, அரசின் பல நடவடிக்கைகளே, பால் உற்பத்தி அதிகரிக்க காரணமாகும். தினமும் சராசரியாக 72 லிட்டர் பால் உற்பத்தியானது. இப்போது ஒரு கோடி லிட்டரை தாண்டியது.
முந்தைய பா.ஜ., அரசு, கே.எம்.எப்., நிறுவனத்தை, நஷ்டத்தின் பாதையில் தள்ளியது. குஜராத்தின் அமுலுடன் இணைக்க சதி செய்தது. கர்நாடக விவசாயிகள் பல ஆண்டு காலம் பாடுபட்டு உருவாக்கிய கே.எம்.எப்.,பை ஒழிக்க முற்பட்டது. இன்று கே.எம்.எப்.,பில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகி, சாதனை செய்துள்ளது. இந்த பெருமை விவசாயிகளை சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.