மெட்ரோ ரயில் திட்டத்தில் கிரேன் விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் காயம்
மெட்ரோ ரயில் திட்டத்தில் கிரேன் விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் காயம்
ADDED : ஆக 08, 2024 12:04 AM
புல் பிரஹலாத்பூர்: தென்கிழக்கு டில்லியில் மெட்ரோ கட்டுமானப் பகுதிக்கு அருகே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தங்குமிடத்தின் மீது கிரேன் விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஒரு பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
எம்.பி., சாலையில் உள்ள ஓக்லா மெட்ரோ தளத்திற்கு அருகில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. பணி நடக்கும் இடத்திலேயே தற்காலிக கூடாரம் அமைத்து பணியாளர்கள் தங்கியிருந்தனர்.
துாங்கிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:54 மணிக்கு விபத்து குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். கிரேபா, 35, என்ற தொழிலாளிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மற்ற நால்வருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் ஐந்து பேரும் எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கிரேபா ஏற்கனவே இறந்துவிட்டாரென, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை அடுத்து, கிரேன் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த கிரேன், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.
ஓக்லா மெட்ரோ தளத்தில் இருந்து துக்ளகாபாத் பகுதிக்கு கிரேனை ஓட்டுனர் கொண்டு செல்ல முயன்றபோது, விபத்து நேர்ந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
கிரேன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.