1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பால் காவிரியில்... வெள்ளப்பெருக்கு! பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க முகாம்கள் தயார்
1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பால் காவிரியில்... வெள்ளப்பெருக்கு! பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க முகாம்கள் தயார்
ADDED : ஜூலை 27, 2024 05:02 AM

பெங்களூரு : கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் மூடப்பட்டு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள, கே.ஆர்.எஸ்., அணை இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுதும், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும், 1 லட்சம் முதல் 1.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இருப்பதாகவும், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், காவிரி நீர்பாசன கழக அதிகாரிகள் கூறி இருந்தனர்.
* படகுகள் நிறுத்தம்
நேற்று முன்தினம் இரவு 8:00 மணி நிலவரப்படி, அணையில் இருந்து 70,044 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின், நள்ளிரவு கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, வெஸ்ட்லி பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. அணை பகுதியில் இருக்கும் பிருந்தாவன் பூங்காவின் இசை நீருற்றை இணைக்கும் சாலை மூழ்கியது. இதனால் இசை நீருற்று நிகழ்ச்சி, படகு சவாரி நிறுத்தப்பட்டது.
* சரணாலயம் மூடல்
ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 10 நாட்களுக்கு முன்பே படகு சவாரி நிறுத்தப்பட்டு இருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தின் டிக்கெட் கவுன்டர் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து, சுற்றுலா பயணியருக்கு, சரணாலய நிர்வாகம் தடை விதித்து உள்ளது. காவிரி ஆற்றையொட்டி உள்ள, ஸ்ரீரங்கப்பட்டணா நிமிஷாம்பா கோவிலில் பக்தர்கள் குளிக்கும் இடத்தையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் அங்கு குளிக்கவும், ஆற்றின் அருகில் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆற்றையொட்டி அமைந்துள்ள தொட்ட ஒசய்கட்டே, மகாதேவபுரா, தொட்டபாளையா, மலகாலா, சிக்கபாளையா உள்ளிட்ட கிராமங்களில் எந்த நேரத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்பதால், கிராமங்களை வருவாய் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு, பத்திரமாக தங்க வைக்க முகாம்களும் தயாராகி வருகின்றன.
குடகு, சோமவார்பேட் சாந்தஹள்ளி பகுதியில் பெய்த கனமழையால், சோமவார்பேட்டில் இருந்து மடிகேரி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. ஹேமாவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஹாசன் சக்லேஸ்பூரில் உள்ள மல்லேஸ்வர சுவாமி கோவிலை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
* கடல் சீற்றம்
இது ஒருபக்கம் இருக்க, கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் உடுப்பி படுபித்ரி, உச்சிலா கடற்கரைகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. வடமாவட்டங்களிலும் மழை, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வேதகங்கா ஆற்றின் வெள்ளத்தால், பெலகாவி நிப்பானி ஒன்னரகி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.
அந்த கிராமத்தில் வசித்த 26 குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வேதகங்கா, துாத்கங்கா, மார்க்கண்டேயா ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெலகாவி மாவட்டத்தில் 30 தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால், பல கிராமங்களின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. துங்கபத்ரா ஆற்றின் வெள்ளத்தால், விஜயநகர் மாவட்டம் ஹம்பியில் உள்ள புராதன சின்னங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
***

