அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு
அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு
ADDED : ஜூலை 18, 2024 12:32 AM

ஹரியானா: 'அக்னி வீரர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள், சுரங்க காவலர் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
ராணுவத்தில், 'அக்னி வீர்' என்ற புதிய திட்டத்தை 2022ல் மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் வாயிலாக, மூன்று படைப்பிரிவுகளிலும், நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் அக்னி வீரர்கள் பணியமர்த்தப்படுவர். இதில், 25 சதவீதத்தினருக்கு மட்டுமே, மேலும் 15 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணிகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, முதல்வர் நயாப் சிங் சைனி கூறியுள்ளதாவது:
கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக்காவலர், சிறைக்காவலர் மற்றும் சிறப்பு காவல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு, நேரடி ஆட்சேர்ப்புகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
குரூப் 'சி' பதவிகளில் அவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும். குரூப் 'சி' மற்றும் 'டி' பணியிடங்களில் மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்.
அக்னி வீர் திட்டத்தின் முதலாமாண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த தளர்வு ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.
சொந்த தொழில் துவங்க விரும்புவோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அக்னி வீர் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்த பின், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.