ஷஹபாத் பால் பண்ணையில் 100 குடிசைகள் எரிந்து சாம்பல்
ஷஹபாத் பால் பண்ணையில் 100 குடிசைகள் எரிந்து சாம்பல்
ADDED : மே 02, 2024 12:28 AM
புதுடில்லி:ஷஹபாத் பால் பண்ணை அருகே அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று மதியம் 1:45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. குடிசைகள் மளமளவென கொழுந்து விட்டு எரிந்தன. தகவல் அறிந்து 10 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
குடிசைகளுக்குள் இருந்த காஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அந்தப் பகுதி முழுது அடர்ந்த கரும் புகை சூழ்ந்தது. மாலை வரை கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி தர்மேஷ் குமார், “இங்கு 10 ஆண்டுகளாக வசிக்கிறேன். வீட்டு வேலை செய்கிறேன். இந்தச் சிறிய குடிசைதான் எங்கள் உடைமை. எங்கள் குடும்பமே இப்போது தெருவில் நிற்கிறது. அடுத்த வேளை உணவு மற்றும் உடை எதுவுமே இல்லை. அரசுதான் எங்களுக்கு மறுவாழ்வு அமைத்து தர வேண்டும்,”என்றார்.

