108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசுக்கு 10 நாட்கள் 'கெடு'
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசுக்கு 10 நாட்கள் 'கெடு'
ADDED : மார் 22, 2024 05:56 AM
பெங்களூரு: ''ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என சுவர்ண கர்நாடக ஆரோக்கிய கவசம் (108) ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக, சங்க தலைவர் சங்கர் அளித்த பேட்டி:
ஆரோக்கிய கவசம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை.
இதுபோன்று நடந்தால் எங்களால் எப்படி வாழ முடியும்.
இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் எங்களுடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை விடுவிக்க வேண்டும்.
சமீபத்தில் சுகாதார துறை கமிஷனருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 36 ஆயிரத்து 008 ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு 6,000 ரூபாய் பிடித்தம் போக, 30,000 ரூபாய் ஊதியம் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஊதியத்தை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் இதுவரை நடக்கவில்லை.
பத்து நாட்களுக்குள் எங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில்ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

