11 சி.ஏ.ஜி., அறிக்கைகளை தாக்கல் செய்ய சபாநாயகருக்கு உத்தரவு
11 சி.ஏ.ஜி., அறிக்கைகளை தாக்கல் செய்ய சபாநாயகருக்கு உத்தரவு
ADDED : ஆக 16, 2024 09:13 PM
சிவில் லைன்ஸ்:சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சி.ஏ.ஜி., அறிக்கையின் மீதியைத் தாக்கல் செய்யும்படி சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி சட்டபேரவை சபாநாயர் ராம் நிவாஸ் கோயலுக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா எழுதியுள்ள கடிதம்:
மாநில அரசின் செலவினங்கள் குறித்த இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் 11 அறிக்கைகள் இன்னும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை என, கவர்னர் மாளிகைக்கு ஜூலை 18ம் தேதி இந்திய தலைமை தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் இருந்து நினைவூட்டல் கடிதம் வந்தது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாமல், இந்த அறிக்கைகள் அனைத்தும் மாநில நிதி அமைச்சரிடம் நிலுவையில் இருப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை சட்டப்பேரவையில் விரைவாக தாக்கல் செய்ய, நிதி அமைச்சருக்கு அறிவுறுத்தும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதி வலியுறுத்தப்பட்டது.
இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாமல் இருப்பது, அரசியலமைப்பு மற்றும் சட்டவிதிகளை மீறும் செயல். அரசியலமைப்பு வகுத்துள்ள கடமைகளை முற்றிலும் மீறும் செயல்.
அறிக்கைகளை வெளியிடாததன் மூலம், சட்டப்பேரவை மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டு வருவதை டில்லி அரசு தவிர்க்கிறது. ஜனநாயகப் பொறுப்புக்கூறலின் அடிப்படையையே கேலிக்குரியதாக மாற்றுவதாக உள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் மேலும் தாமதமின்றி டில்லி சட்டமன்றத்தின் முன்வைப்பதற்கு சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்ய உங்கள் அதிகாரத்தை டில்லி அரசாங்கத்தின் மீது பயன்படுத்துமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் துணைநிலை கவர்னர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில நிதி, மாசு குறைப்பு, கட்டுப்பாடு மற்றும் மது வினியோகம், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த செயல்திறன் தணிக்கை உள்ளிட்ட 11 அறிக்கைகள், நிதியமைச்சர் ஆதிஷியிடம் நிலுவையில் இருக்கின்றன.
இந்த அறிக்கைகளில் சில 2022 முதல் நிலுவையில் உள்ளன.
கடந்த 2017 - 18 முதல் 2021 - 22 வரையிலான டில்லியில் மதுபானங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வழங்குதல் மீதான செயல்திறன் தணிக்கை தொடர்பான அறிக்கை மார்ச் 4ல் டில்லி ஆம் ஆத்மி அரசுக்கு அனுப்பப்பட்டது. இது மார்ச் 11 முதல் அமைச்சரிடம் நிலுவையில் உள்ளது.
டில்லி அரசின் இப்போது நீக்கப்பட்ட 2021 - 22 கலால் கொள்கை மீதான சர்ச்சையை கருத்தில் கொண்டு, இந்த அறிக்கை முக்கியமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

