ADDED : மே 27, 2024 12:39 AM
ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில் சரளை மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது கவிழ்ந்து விபத்து ஏற்படுத்தியது. இதில், பஸ்சில் இருந்த 11 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உ.பி.,யின் சித்தாபூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர், தனியார் பஸ்சில் உத்தரகண்ட் மாநிலம் தனக்பூரில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த பஸ், உ.பி.,யின் ஷாஜகான்பூர் அருகே ஹாஜியாபூர் பகுதியில் சாலையோர உணவகத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
சிலர் பஸ்சிலும், மேலும் சிலர் பஸ்சின் வெளியிலும் நின்றிருந்தனர். அப்போது சரளை மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் மணல் சரிந்து, பஸ்சில் இருந்தவர்கள் உயிருடன் புதைந்தனர். இதில், இரு குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
விபத்தில் காயம் அடைந்த 10 பேர், ஷாஜகான்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

