ADDED : மார் 08, 2025 01:54 AM
நாராயண்பூர்: சத்தீஸ்கரில், தலைக்கு 40 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து தேடப்பட்ட ஏழு பெண்கள் உட்பட 11 நக்சல்கள், நேற்று சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தார் மண்டலத்துக்கு உட்பட்ட நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளது.
இப்பகுதியில் மாநில போலீசார், பாதுகாப்பு படையினர், ரிசர்வ் படையினர் மற்றும் கோப்ரா படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நாராயண்பூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஏழு பெண்கள் உட்பட 11 நக்சல்கள், போலீசார் முன் நேற்று சரணடைந்தனர்.
இவர்களைப் பற்றி தகவல் தருவோருக்கு, 40 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக ஏற்கனவே போலீசார் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., பிரபாத் குமார் கூறுகையில், “நக்சல் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொண்டன.
''இதன் காரணமாக தேடப்பட்ட நக்சல்கள் பலர், மனம் மாறி திருந்தி வாழும் முடிவு எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் பஸ்தார் மண்டலத்தில் 792 நக்சல்கள், சரணடைந்துள்ளனர்,” என்றார்.
சத்தீஸ்கரில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில், நக்சல்கள் பதுக்கி வைத்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் திலீப் குமார் பாகேல், ஹரேந்திர நாக் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் பாகேல் உயிரிழந்தார்.