தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 110 செ.மீ., மழை!

110 செ.மீ., மழை!

110 செ.மீ., மழை!


ADDED : ஜூலை 23, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜராத்தில் 16 மணி நேரத்தில்... வெள்ளக்காடாக மாறியது முக்கிய நகரங்கள்

ஆமதாபாத், ஜூலை 24–

குஜராத்தில், 16 மணி நேரத்தில் 110 செ.மீ., மழை கொட்டியதை அடுத்து நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கனமழைக்கு ஒருவர் பலியான நிலையில், குடியிருப்பு பகுதிகளில் சிக்கியிருந்த 1,200க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூரத், நவ்சாரி, வல்சாத், தாபி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கனமழையால், வல்சாத் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்குள்ள உமர்காம் தாலுகாவில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று காலை 10:00 மணி வரை 110 செ.மீ., மழை பதிவானது. இந்த மாவட்டத்தின் பல தாலுகாக்களில் 60 செ.மீ., மழை பதிவானது. இதனால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சாலைகளில் தேங்கியுள்ள நீரால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. சூரத் மாவட்டத்தின் தலைநகராக சூரத் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் இருந்த 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழைக்கு தாபி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நவ்சாரி மாவட்டத்தில், காவிர் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, கரையோரம் இருந்த 11 கிராமங்களில் வசித்த 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆமதாபாதில் கனமழையால் முக்கிய சாலைகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் தண்ணீர் புகுந்தது. இருப்பு பாதைகளில் தண்ணீர் புகுந்ததால் ஆமதாபாத் – மும்பை இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஆமதாபாத் நோக்கி வந்த பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. நர்மதா மாவட்டத்தில் டெடியபாடா, சாக்பாரா பகுதிகளில் கொட்டிய மழையால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின. மழையால் மாநிலம் முழுதும் 300க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, 1.200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காந்திநகரில் செயல்படும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேற்று சென்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பூபேந்திர படேல் மழை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள கலெக்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மழை பாதிப்பு குறித்து முதல்வர் பூபேந்திர படேலிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக நேற்று கேட்டறிந்தார். மாநிலத்துக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, குஜராத்தின் பல மாவட்டங்களில் மேலும் சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பஞ்ச்மஹால், தாஹோத், மஹிசாகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. வல்சாத், நவ்சாரி, சூரத், தாபி, டாங்ஸ் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us