ADDED : மே 24, 2024 11:25 PM

ஜெய்ப்பூர்: வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை உச்சத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தானின் பால்மர் பகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று 48.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நேற்று, 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று, 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது. வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணியருக்கு அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கும் ஆபத்து இருப்பதால், மிகுந்த கவனமுடன் பார்த்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளது.
வெப்ப அலை காரணமாக நாட்டில் மின் பயன்பாடும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மின் தேவை, 234 ஜிகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இந்த வாரம் அதையும் தாண்டி, 237 ஜிகா வாட் ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக, 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜலோர், பால்மர், அல்வார், ஜெய்சால்மர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.