ADDED : செப் 07, 2024 07:41 AM
பெங்களூரு: ராம்நகர், விஜயபுரா உட்பட, வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், 12 பேர் பலியாகினர்.
கர்நாடகாவில் சாலை விபத்துகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திண்டாடுகின்றனர்.
ராம்நகர்
ராம்நகரின், மாயகொண்டனஹள்ளியின், பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் ரோட்டில் நேற்று காலை 7:30 மணியளவில், பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த குரு மூர்த்தி, 39, ஷேக் அபீஸ், 45, வெங்கடேஷ், 50, ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
கட்டட கட்டுமான தொழிலாளர்களான இவர்கள், பணி நிமித்தமாக மற்றொரு தொழிலாளி ஹனுமந்தாவுடன், ஒரே பைக்கில் சென்றபோது, விபத்து நடந்தது.
விபத்தில் காயமடைந்த ஹனுமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ராம்நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விஜயபுரா
விஜயபுரா, முத்தேபிஹாளின், குன்டோஜி கிராமத்தில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை முன்னிட்டு சாகச விளையாட்டுகளும் நடந்தன. இதை பார்ப்பதற்காக, வெவ்வேறு கிராமங்களில் இருந்தும், இளைஞர்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின், சில இளைஞர்கள் பைக்கில், தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். முத்தேபிஹாள் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க, ரோட்டை கடந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த பைக், இவர்கள் மீது மோதியது.
இதில் ராயப்பா மஹாந்தப்பா பாகேவாடி, 24, நிங்கராஜு, 22, குமார் பாடி, 18, அனில் கெனூரா, 23, ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முத்தேபிஹாள் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாகல்கோட்
பாகல்கோட்டின், நவநகரில் நேற்று முன் தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி திருப்பத்தில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக எதிரே வந்த பைக் மீது மோதியது. ஸ்கூட்டியில் இருந்த ஸ்ருதி, 32, ரஜனி, 34, பைக்கில் இருந்த அபிஷேக் தோத்ரி, 20, ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
நவநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மங்களூரு
தட்சிண கன்னடா, மங்களூரு புறநகரில், யெம்மாடி என்ற இடத்தில், நேற்று அதிகாலை சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து தரையில் உருண்டது. பைக்கில் இருந்த சேத்தன், 24, காசிநாத், 17, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.