திரிபுராவை திருப்பி போட்ட மழை நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி
திரிபுராவை திருப்பி போட்ட மழை நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி
ADDED : ஆக 22, 2024 11:56 PM

அகர்தலா :திரிபுராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த 18ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு திரிபுரா, கோவாய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இது தவிர பிரதான ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட மத்திய துணை ராணுவப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி தவித்த 32,750 பேர் மீட்கப்பட்டு, 330 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் 1,900 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாயமானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மாணிக் சாஹாவின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக நான்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிபுராவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேற்கு திரிபுரா, செபாஹிஜாலா மாவட்டங்களில், நேற்று கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. இதனால் இன்றும், நாளையும் திரிபுரா முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.