ADDED : ஜூலை 05, 2024 12:51 AM
கோழிக்கோடு, கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு, 12 வயது சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இந்த தொற்றுக்கு மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின், பெரோக் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் பிரசாத் - ஜோதி தம்பதி. இவர்களுக்கு மிருதுள், 12, என்ற மகன் இருந்தார்.
தலைவலி
அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மிருதுள், உள்ளூர் குளத்தில் கடந்த மாதம் குளித்துள்ளார்; அதன் பின், தலைவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார்.
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு, 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற தொற்று கண்டறியப்பட்டது. இதை, மூளையை தின்னும் அமீபா நோய் என்றும் அழைப்பர்.
பின்னர் தனியார் மருத்துமனைக்கு மாற்றப்பட்ட சிறுவனின் உடல்நிலை கடந்த மாதம் 24 முதல் கவலைக்கிடமானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
கண்ணுாரைச் சேர்ந்த தக் ஷினா, 13, மலப்புரத்தைச் சேர்ந்த பத்வா, 5, ஆகியோரும் இதே தொற்றுக்கு கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்துள்ளனர். 'நெக்லேரியா போலேரி' என்ற கிருமியால் ஏற்படும் இந்த தொற்று, மூளையை தின்னும் அமீபா என்று அழைக்கப்படுகிறது. ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை கிருமிகள் வாழ்கின்றன.
அவற்றில் குளிப்பவர்களின் மூக்கு துவாரம் வழியாக உடலுக்குள் செல்லும் இந்த தொற்று, மூளையை தாக்கி திசுக்களை அழிக்கிறது.
இதனால் மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று பாதித்தோருக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, குமட்டல், வலிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
அறிவுறுத்தல்
காதுகளில் தொற்றுள்ள குழந்தைகள் குளங்கள் அல்லது தேங்கிய நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என, கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
நீச்சல் குளங்கள் மற்றும் நீர் விளையாட்டு பூங்காக்களில் உள்ள நீர்நிலைகளில் தொடர்ச்சியாக குளோரின் பயன்படுத்தி பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை தொற்றுக்கான சிகிச்சைக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிடவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.