ADDED : ஜூன் 03, 2024 11:23 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தானின் மோதிபுரா கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் குடும்பத்தினருடன், மத்திய பிரதேசத்தின் குமாலப்பூரில் நடந்த திருமண நிகழ்விற்கு நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் சென்றனர்.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கார் மாவட்டத்தின் பிப்லோடி என்ற பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், அப்பகுதி மக்களின் உதவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், நான்கு குழந்தைகள் உட்பட, 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பேரை, அருகே உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மணமகனின் உறவினர் தீபக் என்பவர் டிராக்டர் ஓட்டியதாகவும், அவர், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. விபத்துக்கு பின், தீபக் தப்பிச்சென்ற நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.