ADDED : மார் 05, 2025 04:24 AM

கட்டாக் ; பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற, 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும், 27 வார கருவை கலைக்க ஒடிசா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 வயதான பழங்குடியின சிறுமி, உள்ளூர் இளைஞரால் தொடர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மிரட்டலுக்கு பயந்து அதை வெளியில் சொல்லாமல் இருந்தார்.
அந்த சிறுமி கர்ப்பமடைந்து, 6 மாதங்களுக்கு பிறகுதான் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. 24 வாரத்துக்கு மேலான கருவை கலைக்க சட்டத்தில் இடமில்லை. இதை தொடர்ந்து கருக்கலைப்புக்கு அனுமதி கோரி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோர் மனு செய்தனர்.
சிறுமியின் உடல்நிலையை சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சோதனையில், 'சிறுமிக்கு, 'சிக்கில் செல் அனீமியா' என்ற வலிப்பு நோய் பாதிப்பு இருப்பதால், பிரசவிப்பது சிறுமியின் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும்' என, மருத்துவ அறிக்கை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் வயிற்றில் வளர்ந்து வரும், 27 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் தேவையற்ற தாமதங்கள் செய்வதை உயர் நீதிமன்றம் விமர்சித்தது.
இதுபோன்ற விவகாரங்களில், முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், அதிகார மட்டத்தில் ஏற்படும் தடைகளை தவிர்க்கவும், போலீஸ் செயல்படும் விதம் குறித்து நிலையான இயக்க நடைமுறையை வகுக்கும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.