கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
UPDATED : ஜூலை 28, 2024 07:47 AM
ADDED : ஜூலை 28, 2024 06:37 AM

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஏழு ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால், 310 கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது. கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, வினாடிக்கு 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து உள்ளதால், காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக வடமாவட்டமான பெலகாவியில் கடந்த சில தினங்களாக, கனமழை கொட்டி தீர்க்கிறது. அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவிலும் கனமழை பெய்வதால், அங்கு உள்ள கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பெலகாவியில் ஓடும் வேதகங்கா, துாத்கங்கா, மல்லபிரபா, கட்டபிரபா, கிருஷ்ணா, மார்க்கண்டேயா, ஹிரண்யகேஷி ஆகிய 7 ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள 30 தரைப்பாலங்கள் மூழ்கியதால், கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
முதியவர் பலி
நிப்பானி தாலுகா ஹொன்னரகே கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. கிராமத்தில் வசித்த மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கேஸ்வரா டவுனில் உள்ள சங்கேஸ்வர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது. முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் நின்று, அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.
நிப்பானி கரடகா கிராமத்தில் உள்ள, பங்காளி பாவா தர்கா பாதி அளவு மூழ்கியது. ஹிரண்யகேஷி ஆற்றின் வெள்ளத்தால், கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்ற அதிகாரிகள் தயாராகி உள்ளனர். வீட்டிற்குள் மழைநீர் புகுந்த அதிர்ச்சியில் தசரதா பண்டி, 80 என்ற முதியவர் மாரடைப்பால் இறந்தார்.
ஆற்றுப்பாலம் மூழ்கியது
பெலகாவி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும், மக்களை தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் 427 முகாம்களை திறந்து வைத்து உள்ளது. இந்த முகாம்களில் தங்கும் மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று, கலெக்டர் முகமது ரோஷன் அறிவுறுத்தி உள்ளார்.
யாத்கிர் நாராயணபுரா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள, பசவசாகர் அணைக்கு 2,90,042 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,03,925 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் யாத்கிர் கொல்லுார் எம் கிராமத்தில் உள்ள, ஆற்றுப்பாலம் மூழ்கியது.
கிருஷ்ணா ஆற்றின் வெள்ளத்தால் பாகல்கோட் மாவட்டத்தின் ஜமகண்டி, முதோல் தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது. மக்கள் பொருட்களை மூட்டை, மூட்டையாக கட்டி கொண்டு வீடுகளை காலி செய்தனர். கால்நடைகளையும் அழைத்து சென்றனர்.
பல்லாரி துங்கபத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 1,17,691 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. துங்கபத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹம்பியில் உள்ள புராதன சின்னங்கள் மூழ்கின.
வெள்ள அபாய பீதி
49.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையின் நீர்இருப்பு 48.30 அடியாக உள்ளது. நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,22,021 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,31,234 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், சாம்ராஜ்நகர் கொள்ளேகால் அருகே பழைய ஹம்பாபுரா கிராம மக்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது.
ரயில்கள் ரத்து
பெங்களூரு நகரில் மழை பெய்யாவிட்டாலும், நகரின் பலத்த காற்று வீசியது. ரிச்மென்ட் சதுக்கத்தில் மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில், டிரைவர் திவாகர், 42 கால் முறிந்தது. கெம்பேகவுடா நகர் கங்கேனஹள்ளியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற ககன், 38, அவரது மகன் யுவா, 10 காயம் அடைந்தனர். அத்திகுப்பே ஹம்பிநகரில் மரம் விழுந்ததில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. குயின்ஸ் ரோட்டிலும் இரண்டு கார்கள் மீது மரம் விழுந்தது.
ஹாசன் சக்லேஸ்பூர் பகுதியில் பெய்யும் கனமழையால், எடகுமரி - கடகரவள்ளி இடைப்பட்ட ரயில் பாதையில் பல இடங்களில், மண்சரிந்து விழுந்து உள்ளது. இதனால் பெங்களூரு - கண்ணுார் ரயில் வண்டி எண்:16511; பெங்களூரு - கார்வார் 16595 ரயில் இன்றும்; கண்ணுார் - பெங்களூரு ரயில் 16512 இன்றும், நாளையும்; கார்வார் - பெங்களூரு ரயில் 16596 இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - முருடேஸ்வரா ரயில் 16585 இன்று; முருடேஸ்வரா - பெங்களூரு ரயில் 16586 நாளை ரத்து செய்யப்பட்டு உள்ளது.