மூன்று பயிற்சி மாணவர் பலியான வழக்கு ஆறு பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
மூன்று பயிற்சி மாணவர் பலியான வழக்கு ஆறு பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
ADDED : செப் 04, 2024 07:58 PM
இந்தியா கேட்:மழை வெள்ளத்தில் மூழ்கி பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 27ல் கனமழை பெய்தது. டில்லி பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ராவ்வின் ஐ.ஏ.எஸ்., படிப்பு மைய கட்டடத்தின் அடித்தள வெள்ளத்தில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அடுத்தடுத்த விசாரணையில் கட்டட உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கைதான ஆறு பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்திருந்தது. அதன்படி ஆறு பேரையும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
காவல் முடிவடைந்த நிலையில் ஆறு பேரும் நேற்று கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நிஷாந்த் கார்க் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை மேலும் காவலில் வைத்து விசாரிக்கத் தேவையில்லை என, சி.பி.ஐ., தரப்பில் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆறு பேரையும் வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.