ADDED : செப் 01, 2024 11:29 PM
யாத்கிர்: போலியான மதிப்பெண் சான்றிதழ் அளித்து, பல்வேறு மருத்துவமனைகளில் பணியில் அமர்ந்துள்ள 14 பேர் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ல், 'டி' குரூப் பணியிடங்களுக்கு நியமனங்கள் நடந்தன. எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள், கவுன்சலிங் மூலமாக பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் 14 பேர், போலியான மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்து, பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு பின், இவர்களின் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீபத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தெரிந்தது. தற்போது இவர்கள் 14 பேரும், யாத்கிர் மாவட்டத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில், 'டி' குரூப் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை இயக்குனர், போலி சான்றிதழ் தாக்கல் செய்தவர்களின் ஆவணங்கள், அவர்கள் பிறந்த தேதி, பணி உத்தரவு கடிதம் கொடுத்த தேதி உட்பட அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும்படி, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் 14 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.