ADDED : பிப் 25, 2025 10:40 PM
டி.ஜே.ஹள்ளி: ஆயுதங்களுடன் பைக்கில் சென்று, 'பில்டப்' காட்டிய 14 வாலிபர்களின் பெயர்களை, ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த வாலிபர்கள் 14 பேர், இரண்டு நாட்களுக்கு முன்பு, டி.ஜே.ஹள்ளியில் இருந்து ஹொஸ்கோட் வரை பைக்கில் சென்றனர்.
வீலிங் செய்தபடி சென்றதுடன், தங்கள் கையில் வைத்திருந்த அரிவாள், வாளை தரையில் உரசி தீப்பொறி வரவிட்டபடி, பில்டப் காட்டியபடி சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாயின.
டி.ஜே.ஹள்ளி போலீசார் 14 வாலிபர்களையும் கைது செய்தனர். பின், போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் 14 பேரும், குற்ற பின்னணி கொண்டவர்கள் என்பது தெரிந்தது.
இதனால், 14 பேரின் பெயர்களையும், ரவுடி பட்டியலில் சேர்க்க, போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, டி.ஜே.ஹள்ளி போலீசார் கடிதம் எழுதி இருந்தனர்.
இதற்கு கமிஷனரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நேற்று 14 பேரின் பெயர்களும், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டன. இனி ஏதாவது வழக்கில் சிக்கினால், ரவுடி என்றே குறிப்பிடப்படுவர்.