காங்., நிர்வாகி கொலை வழக்கு 14 பேர் குற்றவாளியாக அறிவிப்பு
காங்., நிர்வாகி கொலை வழக்கு 14 பேர் குற்றவாளியாக அறிவிப்பு
ADDED : ஜூலை 27, 2024 12:28 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் உட்பட 14 பேரை கோர்ட் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் ராமபத்ரன். இவர் ஐ.என்.டி.யு.சி., எனப்படும் காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவின் தலைவராக இருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு, இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மனைவி, குழந்தைகள் கண் எதிரே ராமபத்ரனை வெட்டி கொலை செய்து தப்பினர்.
இது தொடர்பான வழக்கை கேரள போலீசார் விசாரித்த நிலையில், சி.பி.ஐ., விசாரிக்கக்கோரி ராமபத்ரனின் குடும்பத்தினர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் சி.பி.ஐ., கோர்ட், 14 ஆண்டுகள் விசாரணைக்கு பின் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜிவ் தன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூ., கொல்லம் மாவட்ட குழு உறுப்பினர் பாபு பனிக்கர் மற்றும் அஞ்சல் பகுதி மார்க்சிஸ்ட் முன்னாள் செயலர் சுமன் மற்றும் அவரது கூட்டாளிகள் கிரேஷ், அப்சல் உட்பட 14 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.
இந்த வழக்கிலிருந்து நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு, வரும் 30ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.