கேரளாவில் மீண்டும் பரவும் 'நிபா' 14 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் மீண்டும் பரவும் 'நிபா' 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஜூலை 22, 2024 12:35 AM
கோழிக்கோடு : கேரளாவில், 'நிபா' தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் நேற்று காலை உயிரிழந்தார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், பாண்டிக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், காய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி சிகிச்சை பெற்றார்.
ரத்த மாதிரி
காய்ச்சல் சரி ஆகாததால் கடந்த 15ம் தேதி அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசம் அடைந்ததால் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் அடைந்ததை அடுத்து கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு, சிறுவனுக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிறுவனின் ரத்த மாதிரிகள், மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.
நேற்று முன்தினம் வெளியான பரிசோதனை முடிவில், சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டார்.
மாரடைப்பு
அங்கு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 10:50 மணிக்கு சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
சிறுவனை மீட்க டாக்டர்கள் செய்த தீவிர முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சிறுவனின் இறுதி சடங்கு, உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது.
'உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதா என்பது குறித்து சிறுவனின் உறவினர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்' என, கலெக்டர் தெரிவித்தார்.
சிறுவனின் உயிரை காக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, 'மோனோக்ளோனல் ஆன்டிபாடி'யை செலுத்துவதற்கு முன்பே அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
பொதுவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குள் இந்த மருந்தை அளிக்க வேண்டும். கடைசி வாய்ப்பாக இந்த மருந்தை செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு முன்பே சிறுவன் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த நான்கு பேர் அதிக ஆபத்துள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
முக கவசம்
இதற்கிடையே, கோழிக்கோடு மாவட்டத்தில் முக கவசம் அணியும்படி பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பின், அவர் எங்கெங்கு சென்றார் என்பதை விளக்கும் வரைபடத்தையும் கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் தொற்று பரவுகிறது. கடந்த 2018 முதல் இதுவரை, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2018ல் கோழிக்கோட்டில் முதல்முறையாக தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அதன் பின் 2019ல் கொச்சியிலும், 2021 மற்றும் 2023ல் கோழிக்கோட்டிலும் பரவியது.