ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 1.5 கிலோ தங்கம், ரொக்கம் பறிமுதல்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 1.5 கிலோ தங்கம், ரொக்கம் பறிமுதல்
ADDED : ஆக 13, 2024 01:12 AM

புவனேஸ்வர், ஒடிசாவில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 1.5 கிலோ தங்கம், 2.70 கோடி ரூபாய் வைப்புத் தொகை, வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஒடிசாவில், பொதுப்பணித் துறையில் தலைமை பொறியாளராக பணியாற்றியவர், தாரா பிரசாத் மிஸ்ரா. இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். தன் பதவிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக தாரா பிரசாத் மிஸ்ரா சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தாரா பிரசாத் மிஸ்ராவுக்கு தொடர்புடைய இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஒடிசா லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். தலைநகர் புவனேஸ்வர், கட்டாக், ஜார்சுகுடா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனைகளின் போது, உயர் மதிப்புள்ள 10 அடுக்குமாடி குடியிருப்புகள், ஏழு வீட்டு மனைகள், 2.70 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி வைப்புத் தொகை, 1.5 கிலோ தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை தவிர, 6 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சொகுசு கார்கள், 'ரோலக்ஸ்' உள்ளிட்ட விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவையும் கண்டுபிடிக்கப் பட்டன.
தன் மகளின் மருத்துவக் கல்விக்காக, தாரா பிரசாத் மிஸ்ரா, 80 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில், அவர் செய்துள்ள முதலீடுகளும் கண்டறியப்பட்டன. இவை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

