ADDED : மே 24, 2024 06:18 AM

சுப்பிரமணியபுரா: கல்லுாரி மாணவி கொலை வழக்கில், 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு சுப்பிரமணியபுரா பிருந்தாவன் லே - அவுட்டில் வசித்தவர் பிரபுத்யா, 22. கல்லுாரி மாணவி. கடந்த 15ம் தேதி வீட்டின் குளியல் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரபுத்யாவை யாரோ கொலை செய்ததாக, அவரது தாய் சவுமியா அளித்த புகாரில், கொலை வழக்குப்பதிவானது.
வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் பிரபுத்யாவை கொலை செய்ததாக, பிருந்தாவன் லே - அவுட்டில் வசிக்கும், ஒரு தம்பதியின் மகனான 15 வயது சிறுவன், நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 15 ம் தேதி பிரபுத்யாவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, சிறுவன் உள்ளே புகுந்து உள்ளார். வீட்டில் இருந்து 2,000 ரூபாயை திருடி உள்ளான்.
இந்த நேரத்தில் முன்பக்க கதவை திறந்து, பிரபுத்யா உள்ளே வந்து உள்ளார். சிறுவன் திருடுவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவரை மடக்கி பிடித்து, 'உனது பெற்றோரிடம் கூறுவேன்' என்று, மிரட்டி உள்ளார். பயந்து போன சிறுவன், கத்தியால் பிரபுத்யாவின் கை, கழுத்தில் அறுத்து கொலை செய்து உள்ளார். போலீசிடம் சிக்காமல் இருக்க, பிரபுத்யா எழுதியது போன்று, மரண கடிதம் எழுதி உடல் அருகே, போட்டுவிட்டு தப்பியதும் தெரிந்து உள்ளது.