புதிய ரூ.150, ரூ.75க்கான நாணயங்கள் வேண்டுமா? ரூ.4,100, ரூ.4,250 செலுத்தி 5 மாதம் வெயிட் பண்ணுங்க!!!
புதிய ரூ.150, ரூ.75க்கான நாணயங்கள் வேண்டுமா? ரூ.4,100, ரூ.4,250 செலுத்தி 5 மாதம் வெயிட் பண்ணுங்க!!!
ADDED : செப் 16, 2011 11:27 PM
பாலக்காடு: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 150 மற்றும் 75 ரூபாய்க்கான நாணயங்கள் புழக்கத்தில் விடப்படவில்லை.
அவைகள் உங்களுக்கு வேண்டுமானால், தலா 4,100 மற்றும் 4,250 ரூபாய் செலுத்தி, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
நாட்டில் நாணயங்கள் மற்றும் கரன்சிகளை அச்சிட்டு வெளியிடுவது, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி தான். பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்ற பல்வேறு வகையில் நாணயங்களை, ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். தற்போது, ரிசர்வ் வங்கியின் பவள விழாவை ஒட்டி, 75 ரூபாய்க்கான நாணயத்தையும், பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை ஒட்டி, 150 ரூபாய்க்கான நாணயத்தையும் வெளியிட்டது. ஆனால், அவைகள் இரண்டுமே தற்போது நாட்டில் எங்கும் புழக்கத்தில் இல்லை என்பதும், 10 ரூபாய் மதிப்பைக் காட்டிலும், அதிக மதிப்பிலான இவ்விரு நாணயங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிடுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், 75 ரூபாய்க்கான நாணயம் 44 மில்லி மீட்டர் சுற்றளவும், 35 கிராம் எடையும் கொண்டது. இதன் முகப்பு பகுதியில் 75 என எண்ணும், அசோக சக்கரமும், இந்தியில் பாரத் என்றும், ஆங்கிலத்தில் இந்தியா என்றும் காணப்படும். பின் பகுதியில் புலி சின்னமும், பனை மரமும் இடம் பெற்றுள்ளன. அதேபோல், 150 ரூபாய்க்கான நாணயமும் அதே சுற்றளவும், எடையுடன் காணப்படுகிறது. அந்த நாணயத்தின் முகப்பு பகுதி, 75 ரூபாய்க்கான நாணயத்தின் முகப்பு போலவே காணப்படுகிறது. பின் பகுதியில் ரவீந்திரநாத் தாகூரின் படம் இடம் பெற்றுள்ளது.
இந்நாணயங்களைப் பெற, பணம் செலுத்தி காத்திருக்க வேண்டும். 75 ரூபாய்க்கான நாணயத்தைப் பெற 4,250ம், 150 ரூபாய்க்கான நாணயத்தைப் பெற 4,100 ரூபாயும் செலுத்தி, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் என, நாணயங்களை சேகரிக்கும் பாலக்காடு மாவட்டம், தேன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாபுராஜ் தெரிவித்துள்ளார். பொதுவாக ரிசர்வ் வங்கி வெளியிடும் நாணயங்கள் அனைத்தும் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், வசதிக்காகவும் புழக்கத்தில் இருப்பது வழக்கம். ஆனால், நாணயங்களை சேகரிக்கும் ஆர்வலர்களுக்காக இது போன்ற நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதும் இதுவே முதல் முறையாக இருக்கும் எனத் தெரிகிறது.