ADDED : ஜூலை 04, 2024 02:44 AM
பெங்களூரு: பெங்களூரு மாநராட்சிக்கு உட்பட்ட 150 கி.மீ., சாலைகளில், வரும் 5ம் தேதி முதல், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடக்க உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன், மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 150 கி.மீ., சாலையில், வரும் 5ம் தேதி முதல் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்க உள்ளது. 15 பேக்கேஜ்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 13 பேக்கேஜ்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
மற்ற இரண்டு பேக்கேஜ்களுக்கான டெண்டர் தொடர்பான கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும்.
ஒயிட் டாப்பிங் பணி நடக்கும் சாலைகளில் ஏதேனும் துறைகள் தொடர்பான பணிகள் நடக்க வேண்டுமானால், உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, மனு அளிக்க வேண்டும்.
ஒயிட் டாப்பிங் நடக்கும் சாலையில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சாலையின் இருபுறமும் பணிகள் முடிக்க வேண்டியிருந்தால், முடித்துவிட வேண்டும். ஒயிட் டாப்பிங் பணிகள் முடிந்த பின், சாலையை தோண்ட அனுமதி வழங்க முடியாது.
ஒயிட் டாப்பிங் நடக்கும் சாலைகளில், போக்குவரத்து போலீசாருடன் ஒருங்கிணைந்து, மாற்று வழித்தடத்துக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு எந்த பிரச்னையும் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.