ADDED : மே 29, 2024 05:00 AM

பெங்களூரு : பெங்களூரில் நேற்று வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
கர்நாடகாவில் வனத்துறை எல்லை விரிவடைந்துள்ளது. 2023 - 24ம் ஆண்டில் வனத்துறை எல்லை, 8,300 ஏக்கராகவும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 456 ஏக்கராகவும் அதிகரித்துள்ளது. 2019 - 20ம் ஆண்டில், வனத்துறை வருவாய் 263.41 கோடி ரூபாயாக இருந்தது. 2023 - 24ம் ஆண்டு 417.84 கோடி ரூபாயாக அதிகரித்தது.
மாநிலத்தில் இரண்டு லட்சம் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மூன்று ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்தோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் 2,602.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். கோலாரில் 1,392.41 ஏக்கர் வனப்பகுதியும், மடிகேரியில் 5.50 ஏக்கர், பெங்களூரின் கொத்தனுாரில், 17 ஏக்கர் வனப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கடந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிவித்தபடி, மாநிலம் முழுதும் 5.40 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. நடப்பாண்டு இந்த திட்டத்துக்காக, கூடுதலாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. வனத்துறையில் 6,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
310 வன காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை நீங்கிய பின், நியமன கடிதங்கள் வழங்கப்படும். மேலும் 540 வன காவலர்கள் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு நடக்கிறது.
குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு பகுதிகளில் 7,500 ஏக்கர் வனப்பகுதி, ஆங்கிலேயர் காலத்தில் வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிறுவனங்களிடம் இருந்து, வனத்துறைக்கு 2,000 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளது. ஒப்பந்த காலம் முடிந்த பின், நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகள், ஊருக்குள் புகுவதை தடுக்க ரயில்வே பேரிகேட் அமைப்பது, பள்ளம் தோண்டுவது, சோலார் மின்வேலி பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 332.62 கி.மீ., துாரம் ரயில்வே பேரிகேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 101 கி.மீ., ரயில்வே பேரிகேட் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
யானைகள் பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில், கூடுதலாக 324 கி.மீ., ரயில்வே பேரிகேட் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.