151 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள்
151 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள்
ADDED : ஆக 22, 2024 12:58 AM
புதுடில்லி, நாடு முழுதும், 151 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் உள்ளன. இவற்றில், 16 பேர் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான பெண்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு நடத்தியுள்ளது.
மேற்கு வங்கம் முதலிடம்
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நாடு முழுதும் தற்போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வாக உள்ள 4,809 பேரில், 4,693 பேரின் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில், 16 எம்.பி.,க்கள் மற்றும் 135 எம்.எல்.ஏ.,க்கள் மீது, பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகள் உள்ளன.
அவற்றில், 25 பேருடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில் 21 மற்றும் ஒடிசாவில் 17 பேர் மீது இது போன்ற வழக்குகள் உள்ளன.
இரண்டு எம்.பி.,க்கள் மற்றும் 14 எம்.எல்.ஏ.,க்கள் மீது, பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன.
இந்திய தண்டனை சட்டத்தின், 376 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளில், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.
நிராகரிக்க வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து துன்புறுத்தல் கொடுக்கும் குற்றங்களும் இதில் அடங்கும். இதில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றங்களின் தீவிரத்தை உணர முடியும்.
மிகவும் அதிகபட்சமாக, பா.ஜ.,வைச் சேர்ந்த 54 எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் உள்ளன. காங்கிரசைச் சேர்ந்த 23 பேர், தெலுங்குதேசத்தின் 17 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் உள்ளன. பா.ஜ., மற்றும் காங்.,கைச் சேர்ந்த தலா ஐந்து பேர் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு சீட் வழங்குவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என, ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.