16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லையா: மத்திய அரசு விளக்கம்
16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லையா: மத்திய அரசு விளக்கம்
ADDED : ஜூலை 17, 2024 11:41 PM
புதுடில்லி: குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்டு உள்ள புள்ளி விபரங்கள் பட்டியலுக்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான், 'ஜீரோ டோஸ்' எனப்படும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட பெறாத குழந்தைகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அடிப்படை தவறு
இந்த பட்டியலின்படி, நைஜீரியாவில் 21 லட்சம் குழந்தைகள், 2023ல் ஒரு டோஸ் தடுப்பூசி கூட பெறவில்லை. இது இந்தியாவில் 16 லட்சமாக உள்ளது.
இந்தியாவில் 2021ம் ஆண்டில், 27.3 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையில், 2023ல் தடுப்பூசி பெறாத குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது:
இந்தப் புள்ளி விபரங்களில் சில அடிப்படை தவறுகள் உள்ளன. நம் நாட்டில், 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையிலும், அது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.11 சதவீதமே. இது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.
கடந்த 2023ல் டி.பி.டி., எனப்படும் தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் நோய்களுக்கு எதிரான முத்தடுப்பு ஊசி வழங்கியது, 93 சதவீதமாக உள்ளது. இது, உலக அளவில் 89 சதவீதமாக உள்ளது.
தட்டம்மை
அதுபோல, டி.பி.டி., மூன்றாம் டோஸ் தடுப்பூசி வழங்கியதும் 91 சதவீதமாக உள்ளது. இது, உலக அளவில் 84 சதவீதமாகும்.
இதைத் தவிர, எம்.சி.வி., 1 எனப்படும் தட்டம்மை தடுப்பூசி, 92 சதவீதம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 83 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.