ADDED : ஏப் 08, 2024 04:44 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலை ஒட்டி, 'சி - விஜில்' செயலி மூலம், இதுவரை 16,067 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 15,102 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதி மீறல், புகார்களை, 'சி - விஜில்' செயலியில் புகார் தெரிவிக்க, தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. இதில் பதிவாகும் புகார்களை தேர்தல் அதிகாரி சரி பார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பார். வேட்பாளர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.
இதில் பொது மக்கள் அளிக்கும் புகாருக்கு, 100 நிமிடங்களுக்குள் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். மாநிலம் முழுதும் இதுவரை 16,067 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 15,102 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 965 புகார்களில், 887 புகார்களை பல காரணங்களுக்காக தேர்தல் அதிகாரியால் கைவிடப்பட்டது. 78 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
'சி - விஜில்' மூலம் புகார் அளிப்பதில் விஜயபுரா மாவட்டம் முன்னணியில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 3,295 புகார்களும்; குறைந்தபட்சமாக விஜயநகராவில் 12 புகார்களும் பதிவாகி உள்ளன.

