டில்லியில் நேற்று 2 தீ விபத்துக்கள் 17 கார்கள், 5 கடைகள் எரிந்து நாசம்
டில்லியில் நேற்று 2 தீ விபத்துக்கள் 17 கார்கள், 5 கடைகள் எரிந்து நாசம்
ADDED : மே 30, 2024 02:02 AM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள், 5 கடைகள் எரிந்து சாம்பாகின.
கிழக்கு டில்லி மது விஹார் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு மணிக்கு கார்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து, 9 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் 17 கார்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
மதுவிஹார் பகுதியில் வசிப்போர் இங்கு மாத வாடகை அடிப்படையில் கார்களை நிறுத்தி வருகின்றனர். வாகன நிறுத்துமிடத்தில் உள்ள புதர்களில் ஏற்பட்ட தீ கார்களில் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, வடக்கு டில்லி சாந்தினி சவுக் பதேபுரி மசூதி அருகே நேற்று காலை 3:00 மணிக்கு கடைகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தலைநகர் டில்லியில் சமீபகாலமாக தீ விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஞாயிறன்று தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல் நேற்று முன் தினம், கண் மருத்துவமனையில் தீப்பற்றியது.
இதுதவிர, தொழிற்பேட்டைகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என மின்கசிவு காரணமாக தினமும் இரண்டு விபத்துக்களாவவது ஏற்படுகின்றன.
எனவே, அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என டில்லிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.