லாவோசில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
லாவோசில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
ADDED : ஏப் 06, 2024 11:36 PM

புதுடில்லி: லாவோசில் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வந்த 17 இந்தியர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய துாதரகம், அவர்கள் அனைவரையும் நம் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பதாக வெளியாகும் தகவலை நம்பி, இந்தியர்கள் பலர் இந்நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு செல்லும் நபர்கள், போலி ஏஜென்டு கள் வாயிலாக ஏமாற்றப்பட்டு சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லாவோசில் சட்டவிரோதமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் 17 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக, நம் நாட்டு துாதரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அங்கு சிக்கி தவித்த அவர்களை, அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, அவர்களை நம் நாட்டிற்கு விமானம் வாயிலாக நேற்று திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'லாவோசில் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் சிக்கி தவித்த 17 இந்தியர்களும் மீட்கப்பட்டனர்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இது போன்ற அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும் என வெளியாகும் விளம்பரங்களுக்கு, இந்தியர்கள் யாரும் இரையாக வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

