ADDED : ஆக 01, 2024 11:15 PM
பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, துமகூரு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 17 பேரின் நீதிமன்ற காவலும் நேற்று முடிவடைந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம், பெங்களூரு 24 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை மீண்டும் நீதிமன்ற காவலில் விசாரிக்க, அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார் கேட்டு கொண்டார். நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காக ரிமாண்ட் நகலும் தாக்கல் செய்யப்பட்டது.
ரிமாண்ட் நகலில் கூறப்பட்டு இருப்பதாவது:
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்குவது ஆபத்தானது. தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொலையில் இருக்கும் தொடர்பு வலுவாக உள்ளது.
இன்னும் நிறைய தொழில்நுட்ப ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை மீட்டெடுக்கும் பணிகள் நடக்கின்றன. 164 பிரிவின் கீழ் சாட்சிகளிடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணபலம் அதிகம் உள்ளது. ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரிமாண்ட் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்ற காவலையும், மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.