ரூ.1.70 லட்சம் கோடி முதலீடு பாரத் பெட்ரோலியம் திட்டம்
ரூ.1.70 லட்சம் கோடி முதலீடு பாரத் பெட்ரோலியம் திட்டம்
ADDED : ஆக 20, 2024 02:46 AM

மும்பை;அடுத்த 5 ஆண்டுகளில், பெட்ரோ கெமிக்கல், பசுமை எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட துறைகளில், 1.70 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
எங்களது முக்கிய வணிக நடவடிக்கையான, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில், தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அதே சமயம், பெட்ரோ கெமிக்கல்ஸ், காஸ், பசுமை எரிசக்தி உள்ளிட்டவற்றிலும் சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக, 2025ம் ஆண்டுக்குள் 2 ஜிகா வாட் மின் உற்பத்தி திறனும், 2035க்குள், 10 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனும் கொண்ட கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்களது 6,000 சில்லரை எரிபொருள் விற்பனை நிலையங்களில், நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கான, விரைவான சார்ஜிங் வசதியை வழங்கும் சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.