ADDED : மே 30, 2024 07:28 PM
புதுடில்லி:டில்லியில் நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 180 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அதிகபட்சம்.
டில்லி தீயணைப்புத் துறைக்கு வந்த ஒற்றை நாள் அழைப்புகளில் கடந்த புதன்கிழமை சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம் மொத்தம் 220 அழைப்புகள் வந்துள்ளன. அவற்ரில் தீ தொடர்பான அழைப்புகள் 183.
இதுதொடர்பாக தீயணைப்புத் துறை தலைவர் அதுல் கார்க் கூறியதாவது:
இது இதுவரை இல்லாத அதிகபட்சம். தேசிய தலைநகரில் நிலவும் வெப்ப அலையே தீ விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம். மற்ற அழைப்புகள், பறவை, விலங்குகள் மீட்பது தொடர்பானவை.
ஜனவரி 1 முதல் மே 26 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தீயணைப்புத்துறைக்கு 8,912 தீ தொடர்பான அழைப்புகள் வந்துள்ளன.
பொதுவாக, கோடைக்காலம் முழுவதும் சராசரியாக தினும் 150 அழைப்புகள் வருகின்றன. இவற்றில் 60 அழைப்புகள் தீ விபத்துகள் தொடர்பானவை. மீதமுள்ளவை விலங்குகள் மீட்பு தொடர்பானவை. ஆனால் இந்த முறை விபத்து எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
தேசிய தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்துகளால் இந்த ஆண்டில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.